search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு தலைவர்கள்"

    மீண்டும் பிரதமராக மோடி நாளை இரவு பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    பா.ஜனதா மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    இதையொட்டி கடந்த 25-ந்தேதி நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மோடி சந்தித்து புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். இதை தொடர்ந்து ஆட்சி அமைக்க அவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக நாளை (30-ந்தேதி) பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.

    மோடி மந்திரி சபையில் சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெறுகின்றன.

    மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கர்நாடகா, முதல்-மந்திரி குமாரசாமி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    பதவியேற்பு விழாவில் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

    இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருக்கும் கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த்குமார், மியான்மர் அதிபர் யூவின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தாய்லாந்து சார்பில் சிறப்பு தூதர் கிரிசாடா பூன்ராச் ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்க மாட்டார் என்று அந்நாடு ஏற்கனவே தெரிவித்து விட்டது.

    நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவியேற்பு விழா முடிந்த பிறகு ஜனாதிபதி மாளிகையில் உயர் வகையிலான தேனீர் விருந்து நடைபெறும். மேலும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும்.

    சைவம், அசைவம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விசே‌ஷமான உணவுகள் பரிமாறப்படும்.

    மோடி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பதிலாக வளாகத்தில் நடைபெறுகிறது. அதிகமான பிரமுகர்கள் பங்கேற்பதால் இங்கு நடக்கிறது. ஜனாதிபதி வளாகத்தில் நடைபெறும் 4-வது பதவியேற்பு நிகழ்ச்சியாகும்.

    பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×